அலோபதியில் மிச்சம் வலியும் வேதனையும்தான். நிரந்தர தீர்வு என்று எதுவும் இல்லை. இதற்கிடையில் நண்பர் ஒருவர் டபுள் ஸ்ரீ ரவிசங்கர் (Art of living ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்) நடத்தும் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி நல்லா இருக்கு போய் பாருங்க என்றார். நமக்கு கார்ப்பரேட் சாமியார் என்றாலே அலர்ஜி. அவர்களின் மீது கோபமும் உண்டு. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
அடிப்படையில் நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கையில் இவர்கள் கஷ்டப்படாமல் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டு வாழ்க்கையை சுலபமாக எடுத்துக் கொள் என்று அறிவுரை வேறு சொல்வார்கள். இது ஒரு பெரிய கடுப்பு!
இரண்டாவதாக சாமியார் என்றாலே நாம் ஒரு பிம்பம் வைத்திருக்கிறோம். சரியாக சாப்பிடாமல் கொள்ளாமல் (அது கிடைக்காததால்) ஒரே ஒரு துணி கட்டிக்கொண்டு தியானம் செய்கிறவர்கள் என்று. இன்னொன்று கடவுள் கடவுள் என்று கதைக்கிறார்கள் இதுவரை அவர் வந்ததேயில்லை… இப்போதைய வாழ்க்கை முறையில் இப்போது சாமியார்கள் எல்லாம் சுத்தமாக மாறிப் போய்விட்டார்கள்.
பெங்களூரில் ஒரு யோகா கேம்ப் நடந்தது... மொத்தம் ரெண்டாயிரம் பேர் கலந்து கொண்டார்கள். ஒரு ஆளுக்கு ரூபாய் மூவாயிரம் கட்டணம் அறுபது லட்சம் வசூல். பெரிய மைதானத்தில் நடைபெற்றது. மைக்கில் அவர் பேசப் பேச பயற்சி நடைபெற்றதாக கலந்து கொண்ட நண்பர் சொன்னார். ஆம் இதுவும் வியாபாரம்தான்.
அந்தக் காலத்தில் யோகாசனம் எல்லாருக்கும் கற்றுக் கொடுக்கப் படவில்லை…விவசாயிக்கு யோகா அவசியம் என்று தோணவில்லை. இந்தக் கால விவசாயிக்கு இயந்திரம் கொண்டு வேலை செய்கிற காரணங்களால் இதை மறுக்கவும் வேண்டியிருக்கிறது.
அதேபோல பெண்களுக்கும் அந்தக் காலத்தில் யோகா கற்றுக் கொடுக்கப் படவில்லை. ஏனெனில் இயல்பாகவே அவர்கள் உடம்பு நெகிழ்வானது என்பதனால் மற்றும் அக்காலத்து வீட்டுவேலைகள் உடலைப் பிழிந்து எடுக்கக் கூடியது.
இது போலத்தான் மூச்சுப் பயிற்சியும். பெண்களுக்கு சொல்லித் தரப்படவேயில்லை. அது விபரீதம் என்கிறார் நண்பர் ஒருவர்.ஏன் என்று தெரியவில்லை.
ஆனாலும் இதிலெல்லாம் நம்பிக்கையில்லாமலேயே நான் வளர்ந்து வந்திருக்கிறேன். திடீரென்று கோபம் வருவதும் பின்னர் அதை கோபம் காட்டாமல் சமாளித்திருக்கலாமே என்று வருந்துவதும் வாடிக்கை. கோபம் வருவதை அடக்குவது நல்லதல்ல. அது உடலை மனதை பாதிக்கும். கோபப்பட்டால் உறவுகள் விலகிப்போகும் என்ற இக்கட்டான நிலமை…
நோயின் காரணமாக நண்பர் சொன்னதால் இதைத் தின்னால் பித்தம் தெளியாதா என்று தோன்றியதால் போனேன். ஆயிரம் ரூபாய் வாங்கினார்கள். அதுக்கே கோவம் வந்தது. பேர் சுதர்ஷன் கிரியா என்று சொன்னார்கள். மூன்று நாட்கள் தினமும் ஒன்றரை மணிநேரம் கிளாஸ்.
முதலில் நிறையப் பேசுவார்கள். வேதாந்தக்கருத்துகள் வரும். பெரும்பாலும் குருஜி (ஸ்ரீஸ்ரீ) பற்றி பேசுவார்கள். எரிச்சல் வந்தது.
பின்னர் எளிமையான உடற்பயிற்சிகளை சொல்லித் தருகிறார்கள். அவைகள் கம்ப சூத்திரம் அல்ல. நமக்குத் தெரிந்ததே! ஆனால் தெரிந்ததை நாம் செய்து விடுகிறோமா என்ன? இந்தமாதிரியான விஷயங்களில் முக்கியமானது தொடர்ச்சியாக செய்கிறோமா என்பதே. ஒரு நாள் ரெண்டு மணிநேரம் செய்துவிட்டு மறுநாள் போர்வையை இழுத்துமூடி தூங்குவது என்பது இயல்பு(!). அடிக்கடி சபதம் எடுப்பது என்பது நடுத்தரவர்க்க குணம் என்பார்கள் எண்பதுகளில். இப்போது அதை பொதுப்புத்தி என்கிறார்கள். பரவாயில்லை என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். வருஷம் தோறும் ஜனவரி முதல் தேதி சபதம் எடுக்கிறவங்க நாங்க!
இப்படி ஒவ்வொரு தடவையும்
‘இனிமேல் இப்படி இருப்பேன்!
இனிமேல் இப்படி இருப்பேன்!
இனிமேல் இப்படி இருப்பேன்! என்றே வாழ்க்கை போகிறது. இடுப்பில் இருந்து நழுவி விழுகிற குழந்தையை மறுபடி மறுபடி இழுத்து உட்கார வைக்கிற பெண்ணைப் போல!
இதையும் ரெகுலராகச் செய்யுங்கள் என்றே சொன்னார்கள். தொடர்ச்சியாக செய்தால் மட்டுமே பலன் உணரக்கூடிய அளவில் கிடைக்கும் என்றார்கள்.
நீண்டகாலப் பயிற்சிகள் ------- நீண்டகால பலன்கள்
குறுகியகால பயிற்சிகள் ----- குறுகியகாலம் மட்டும் நிலைத்திருக்கிற பலன்
குறுகியகால பயிற்சி – நீண்டகாலபலனைத் தருமா என்றால் இயற்கையில் இல்லை…செயற்கையில் உண்டு. ஆனால் பக்க விளைவு உண்டு அது நீண்ட காலத்துக்குப் பின் தெரியும். இது பல விஷயங்களில் என் வாழ்வில் பட்டுத் தெரிந்த (தெளிந்த) உண்மை.
முதல் மற்றும் இரண்டாவது நாட்களில் உடற் பயிற்சிகளே! மூன்றாவது நாள் அந்த ‘சுதர்க்ஷன் கிரியா’ என்று டபுள்ஸ்ரீ பெயரிட்ட (அதற்கு முன்னாலும் இது இருந்தது) மூச்சுப் பயிற்சியை கற்றுத் தருகிறார்கள். மொத்தம் 20 நிமிடங்களே அந்த பயிற்சி. மீதி 20 நிமிடங்கள் நீங்கள் உங்களின் உடலை தரையில் கிடத்தி ஓய்வு எடுக்க வேண்டியதுதான்.
So..Ham என்றால் வடமொழியில் ‘அதுவே நான்’ என்று அர்த்தம். So (சோ) என்று சொல்லும் போது மூச்சை உள்ளே இழுக்கவேண்டும். Ham (ஹம்) என்று சொல்லும் போது மூச்சை வெளியை விடவேண்டும்.
அந்த 20 நிமிடங்களும் வெவ்வேறு விதமாக இது திருப்பி திருப்பி சொல்லப் படுகிறது. ரவிசங்கர் ஏதோ கூட்டத்தில் சொன்னதை ஒலிபரப்பி இதை கற்றுத் தருகிறார்கள், இருபது நிமிடம் உடம்பை சல்லடையாக்குகிறது குடைராட்டினம் சுற்றுகிற மாதிரி…ஏறி இறங்கி..மறுபடி ஏறி இறங்கி….ஒரு வேளை தப்பிக்க முடியாத்தால் இருக்கலாம். வீடு என்றால் வேறு வேலை பார்க்க போகலாம் அங்கே போயாயிற்று…செய்து தானே ஆக வேண்டும்.
மொத்தம் இருபத்தைந்து பேர் வந்திருந்தார்கள். அதில் காலம் காலமாய் உழைத்து சேர்த்த (!) உடம்போடு ரிடையர்ட் ஆனதுக்குப் பிறகு வந்தவர்கள் அநேகம்பேர். So…ham என்றதும் வெடித்துக் கொண்டு கிளம்பும் பின்னாடியிருந்து…வாய்வுத் தொல்லை இவர்களிடமிருந்து! முதலிலேயே கண்ணை மூட சொல்லி விடுகிறார்கள். அதனால் பிரச்னை இல்லை. வெட்கப் படாமல் தொடரலாம் (ஆனாலும் மூக்கை மூடச் சொல்லவில்லை)
வாரம் ஒருமுறை இதைச் செய்யலாம். 24 மணிநேரத்துக்கு ஒரு முறை குளிப்பது மாதிரி ஏழு நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்கிற ஒரு விஷயமே இது.
இது அபார பலம் தரும், ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் வியாதிகள் நீங்கும் என்றெல்லாம் சொன்னார்கள். இதெல்லாம் அவர்கள் சொன்னார்கள் என்று நம்பி விடாமல் தேவை இருப்பவர்கள் (என்னைப் போன்ற) முயற்சி செய்து அதன் பலனை அனுபவிக்கலாம்.
ஒரு பத்து வாரத்தில் எனக்கு நல்ல பலன் தெரிந்தது. ஆனால் முதல் ஏழு அல்லது எட்டு வாரங்களில் ஒன்றும் தெரியவில்லை அல்லது நான் உணரவில்லை. பத்து வாரங்கள் தொடர்ச்சியாகச் செய்த்தே என் சாதனை…பெரிய சாதனை…மிகப் பெரிய சாதனை…
ரவிசங்கரோ, ஜக்கி வாசுதேவோ இல்லை ராமதேவோ, இல்லை நித்யானந்தாவோ மொத்தத்தில் கார்ப்பரேட் சாமியார்களின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்கிற மாதிரி அவர்களின் Products ஐயும் விமர்சனம் செய்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நான் சாமியார்களிடம் போக மாட்டேன் என்பதை கொள்கையாகவே வைத்திருந்தவன். ஆனால் அது மனத்தடையாக இருக்கக் கூடாது என்பதை இந்த அனுபவம் எனக்கு உணர்த்தியிருக்கிறது.
இந்த வகுப்பிலும் மூன்றாவது நாளில் இரண்டு பெண்மணிகள் அந்த இரண்டு நாட்களில் கேள்விப்பட்டவைகளால் பாதிக்கப் பட்டு..வரும் போதே கையில் ஆளுக்கு ஒரு மாலையுடன் வந்திருந்தார்கள் ‘சுவாமி ஃபோட்டோவுக்கு மாலை போடலாமா என்று கேட்டுவிட்டு ரவிசங்கர் புகைப்படத்துக்கு மாலை போட்டார்கள். இந்த வழிபாட்டு மனநிலை பிடிக்காத ஒன்று. என்னைப் பொறுத்தவரையில் இங்கே நான் வாங்கிய ‘கருவி’ அல்லது ‘Product’ எனக்கு வேலை செய்தது. ஆக, என்னைப் போன்றவர்கள் நிறைய பேர் இருப்பார்களே…அவர்களும் முயற்சி செய்யலாம்.
உடல் நேற்றும் இன்றும் என்றும் ஒரு அதிசய உலகம்தான். அதில் வரும் நோய்களும் அதற்கான தீர்வுகளும் மருத்துவர்கள் என்னதான் வகைப்படுத்தி பட்டியலிட்டு தீர்த்தாலும் அது இன்னும் முழுதும் அறியப்படாத உலகம். அறிய அறிய அதன் மர்மம் நீண்டு கொண்டே போகிறது. ஒருவருக்கு வேலை செய்கிற மருந்து அடுத்தவருக்கு வேலை செய்யாத நிலமைகளும் உண்டு. இந்தச் சூழ்நிலையில் இந்த மாதிரியான முயற்சிகள் பலன் அளித்தால் வேண்டாம் என்றா சொல்வது.?
இந்த வகுப்பு முடிந்ததும் கட்டணத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து குறைக்கச் சொல்லி ஒரு கடிதம் கொடுத்துவிட்டு வந்தேன். மெயிலாகவும் அனுப்பினேன்.
அதற்காக ரவிசங்கர் என்ன சொன்னாலும் நான் சரி என்று சொல்லவேண்டும் என்றோ அது என்னை பாதிக்க வேண்டும் என்றோ அர்த்தமில்லை. ஆம்…இது வியாபாரம்தான். அவர் ஒரு வியாபாரிதான். அதை அழுத்திச் சொல்வோம்…ஆனால் இந்த Products க்கு தேவை இருக்கிறது. இன்னும் கார்ப்பரேட் சாமியார்கள் அதிகரித்துக் கொண்டே போவார்கள் என்றே தோன்றுகிறது.
என் உறவினர் ஒருவர் நித்யானந்தா விஷயம் வெளிவந்ததும் அடடா…அங்கே சொல்லித் தருகிற பயிற்சிகள் நல்லா இருக்குன்னு சொன்னாங்களே! நானும் போகலாம்னு ப்ளான் பண்ணியிருந்தேனே என்று சொன்னார். என்ன விதமான பயிற்சி என்று கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தோம்.
கார்ப்பரேட் சாமியார்கள் காலத்தின் கட்டாயம். தேவைகள் இருப்பதால். கார்ப்பரேட் சாமியார்களை ஒழிக்கவேண்டுமானால் அதற்கு மாற்று தேவை என்றாகிவிட்டது. அவர்களின் நிறுவனங்களை கட்டுப் படுத்துகிற மாதிரியான நடவடிக்கைகளும் தேவையாய் இருக்கின்றன.
சாமியார்களை மதிக்க மாட்டேன் என்பது கொள்கை. ஆனால் அவர்களின் Products எனக்கு நன்மை பயக்கும் எனத் தெரியாமல் (அல்லது தெரிந்து) அதையும் புறக்கணிப்பது மனத்தடை. கொள்கைகள் மனத்தடைகளாக கூடாது என்பது இந்த அனுபவம் உணர்த்தியது.
தொடர்புடைய எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவு ;
கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?
|
|
5 comments:
கார்ப்பரேட் சாமியார்கள் என்பது உண்மைதான், இவர்கள் ஒவ்வொருவருடைய பயிற்சி முறைகள்,இத்யாதி, இதைப்பற்றி யாரும் எழுதவில்லையே என நினைத்துக்கொண்டிருந்தேன்.உங்கள் அனுபவமும் என்னோடு ஒத்து போகிறது,கொஞ்சம் நகைச்சுவையோடு கூடிய பதிவுக்கு நன்றி.--தி.ரா.கரிகாலன்.
நன்றி கரிகாலன்!
சாமியார் என்றாலே பலர் அருவருப்படையும் நிலை எற்பட்டுள்ளது...
அப்படியும் சிலர் அறியாமையில் உள்ளார்கள்...
அவர்களின் தனிப்பட்ட அசிங்கங்களால் உண்னதமான ஆரோக்கிய பயிற்சிகளும் கலங்கப்பட்டுப் போவதுதான் மனவேதனைப் படுகிறது...
அவர்களை புரக்கனிக்கும் போது அவர்கள் சொல்லிக் கொடுத்த பயிற்சிகளையும் வேண்டாம் என்று விட்டுவிட வாய்ப்புல்லது...
பகிர்வுக்கு நன்றி... நண்பா...
வருகைக்கு நன்றி MVS.
>> விவசாயிக்கு யோகா அவசியம் என்று >>தோணவில்லை. இந்தக் கால விவசாயிக்கு >>இயந்திரம் கொண்டு வேலை செய்கிற >>காரணங்களால் இதை மறுக்கவும் ேண்டியிருக்கிறது.
I think you have understood what yoga means.. Its not a physical exercise.. Please come up with open mind to hear what masters say..
Please search youtube videos see what yoga means by JAGGI.
>> அவர்களின் Products எனக்கு நன்மை பயக்கும் எனத் தெரியாமல் (அல்லது தெரிந்து) அதையும் புறக்கணிப்பது மனத்தடை. GOOD :)
Current world is run by economist. Commerce runs the world. If you need to reach the people
one has to use the channel to reach the people.
I have attended all the classed of above..
Nityanada was more effective.. It helped
me a lot in office..I got very good benefits.
If they were not CORPORATE their practices would have not reached me.. :)
So don't blame these people.. it needs to reach some more unstable persons like me..
Don't judge with your experiences..
you may need to travel in some other direction...
Please see
http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
We easily find fault in others...
but ignoring that and talking good in any
place is intelligence..
Post a Comment